உலகக்கோப்பை கால்பந்து: ஐவரிகோஸ்ட்டை வீழ்த்திய நார்வே

போட்டியின் 2-வது பாதியில் ஐவரிகோஸ்ட் அணியின் அமத் டையல்லோ 74-வது நிமிடத்தில் ஒரு கோல் போட்டார்.
உலகக்கோப்பை கால்பந்து:  ஐவரிகோஸ்ட்டை வீழ்த்திய நார்வே
Published on
Updated on

ஆர்லிங்டன்

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் ஐவரிகோஸ்ட்டை, நார்வே வீழ்த்தியது.

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா நாடுகளில் நடந்து வரும் 23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 48 அணிகள் விளையாடுகின்றன. மொத்தம் 104 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்துள்ளன. 2-வது சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

முதல் கோல்

இதில், இரவு 10.30 மணியளவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஐவரிகோஸ்ட் மற்றும் நார்வே அணிகள் விளையாடின. அமெரிக்காவின் ஆர்லிங்டன் நகரில் உள்ள டல்லாஸ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியின் 39-வது நிமிடத்தில் நார்வே அணி வீரர் ஆன்டனியோ நூசா முதல் கோல் அடித்து ஆட்டத்தில் விறுவிறுப்பை கூட்டினார்.

அதன்பின்னர், கோல் அடிக்கப்படவில்லை. இதனால், ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் 1-0 என்ற புள்ளி கணக்கில் நார்வே அணி முன்னிலையில் இருந்தது.

2-வது பாதி

போட்டியின் 2-வது பாதியில் ஐவரிகோஸ்ட் அணியின் அமத் டையல்லோ 74-வது நிமிடத்தில் ஒரு கோல் போட்டார். 1-1 என போட்டி சமன் அடைந்தது. இதன்பின்னர் 86-வது நிமிடத்தில் நார்வேவின் எர்லிங் ஹாலந்து ஒரு கோல் போட்டார்.

இதனால், 1-2 என்ற கணக்கில் நார்வே அணி முன்னிலை பெற்றது. இதன்பின்னர் கோல் போடப்படவில்லை. கூடுதல் நேரத்திலும் கோல் அடிக்கப்படவில்லை. போட்டியின் முடிவில், 1-2 என்ற கணக்கில் நார்வே அணி வெற்றி பெற்றது. போட்டியின்போது, நார்வே அணிக்கு ஒரு முறை மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. யாருக்கும் சிவப்பு அட்டை காண்பிக்கப்படவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com