உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: கத்தார் அணியுடன் இந்தியா இன்று மோதல்

கத்தாரை வீழ்த்திவிட்டால், இந்தியா சிக்கலின்றி முதல் முறையாக தகுதி சுற்றின் 3-வது ரவுண்டுக்குள் நுழைந்து விடும்.
Image Courtesy: @GurpreetGK / @IndianFootball
Image Courtesy: @GurpreetGK / @IndianFootball
Published on

அல் ரேயான்,

2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஆசிய மண்டலத்துக்கு 8 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்கான தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் மொத்தம் 36 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 9 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் தகுதி சுற்றின் 3-வது ரவுண்டுக்கு முன்னேறும்.

இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கிறது. கத்தார், குவைத், ஆப்கானிஸ்தான் ஆகியவை இந்த பிரிவில் இடம் பெற்றிருக்கும் மற்ற அணிகளாகும். 13 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள கத்தார் 3-வது சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறி விட்டது. மற்றொரு இடத்திற்கு இந்தியா (5 புள்ளி), ஆப்கானிஸ்தான் (5 புள்ளி), குவைத் (4 புள்ளி) இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் 'ஏ' பிரிவில் இன்று கடைசி லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. தரவரிசையில் 121-வது இடத்தில் உள்ள இந்தியா, 34-ம் நிலை அணியான கத்தாரை அல்ரேயானில் உள்ள ஜாசிம் பின் ஹமாத் ஸ்டேடியத்தில் சந்திக்கிறது. இந்திய நேரப்படி இரவு 9.15 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. குவைத் சிட்டியில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- குவைத் அணிகள் மோதுகின்றன.

அனுபவம் வாய்ந்த மூத்த வீரர் சுனில் சேத்ரி ஓய்வு பெற்று விட்ட நிலையில் இந்த ஆட்டத்திற்கு இந்திய அணியின் கேப்டனாக கோல் கீப்பர் குர்பிரீத் சிங் சந்து செயல்பட உள்ளார்.

பலம் வாய்ந்த கத்தாரை அவர்களது இடத்தில் வீழ்த்துவது எளிதானது அல்ல. ஆனால், கத்தாரை சாய்த்து விட்டால் இந்தியா சிக்கலின்றி முதல் முறையாக தகுதி சுற்றின் 3-வது ரவுண்டுக்குள் நுழைந்து விடும். மாறாக தோற்றால் வெளியேற வேண்டியது தான். ஒரு வேளை டிரா செய்தால், ஆப்கானிஸ்தான்- குவைத் ஆட்டமும் டிராவில் முடிய வேண்டும். அப்போது கோல் வித்தியாசம் அடிப்படையில் இந்தியா அடுத்த சுற்றை எட்டி விடும்.

ஏற்கனவே இவ்விரு அணிகள் புவனேஸ்வரில் சந்தித்த ஆட்டத்தில் கத்தார் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com