

மொகாலி,
நடப்பு சாம்பியன் இந்தியா, மலேசியா, தென்கொரியா, சீனா, ஜப்பான், வங் காளதேசம் ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் 9-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி வருகிற 27-ந்தேதி முதல் நவம்பர் 5-ந்தேதி வரை பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மற்றும் மொகாலியில் நடக்கிறது. பஞ்சாப்பில் சர் வதேச ஆக்கி போட்டி நடப்பது 2009-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 27-ந்தேதி வங்காளதே சத்தை எதிர்கொள்கிறது.
இந்திய அணியை ஹர்மன்பிரீத் சிங் வழிநடத்துகிறார். ஆசிய விளையாட்டு போட்டியில் அடுத்தடுத்து இரு முறை தங்கம் வென்றுத்தந்த முதல் கேப்டன் என்ற பெருமைக்குரிய 30 வயதான ஹர்மன்பிரீத் சிங் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். சொந்த மண்ணில் களம் இறங்கும் உற்சாகத்தில் உள்ள அவர் அளித்த ஒரு பேட்டியில், 'ஒட்டுமொத்த அணிக்கு குறிப்பாக பஞ்சாப்பை சேர்ந்த வீரர்களுக்கு இது ஒரு சிறப்பு வாய்ந்த நிகழ்வாக இருக்கப் போகிறது. ஏனெனில் பஞ்சாப்பில் நடைபெறும் ஒரு சர்வதேச தொடரில் இந்திய அணியின் சீருடையை நாங்கள் அணிந்து விளையாடுவது இதுவே முதல் முறையாகும்.
இதே போல் முதல் முறையாக எனது ஒட்டுமொத்த குடும்பத்தினரும் மைதானத்திற்கு வருகை தந்து, ஒன்றாக அமர்ந்து, நான் சர்வதேச போட்டியில் விளையாடுவதை பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். நான் தேசத்திற்காக ஆடுவதை மைதானத்தில் உட்கார்ந்து இதுவரை பார்த்திராத எனது தந்தையும் இதில் அடங்குவார்' என்றார்.