

மொகாலி
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி அரை இறுதி போட்டியில் தென்கொரியாவை, இந்தியா வீழ்த்தியது.
9-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி விறுவிறுப்பான கட்டத்திற்கு வந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் மொகாலியில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, தென்கொரியாவை எதிர்கொண்டது.
போட்டி தொடங்கிய 4-வது நிமிடத்தில், முதல் கோலை ஷிலானந்த் லாக்ரா போட்டார். போட்டியில் இந்திய அணிக்காக, ஷிலானந்த் லாக்ரா (4-வது நிமிடம், 13-வது நிமிடம்) மற்றும் தில்ப்ரீத் சிங் (21, 25) தலா இரண்டு கோல்களை அடித்தனர். ஹர்மன்பிரீத் சிங் (9), சுக்ஜீத் சிங் (21), அங்கத் பிர் சிங் (36) மற்றும் விவேக் சாகர் பிரசாத் (54) ஆகியோர் தலா ஒரு கோலை அடித்தனர்.
இதில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் நடப்பு போட்டி தொடரில், தனது 10-வது கோலை அடித்துள்ளார். லாக்ரா 13-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோலை போட்டார். இதனால், 3-0 என இந்தியா முன்னிலை பெற்றது. இதனை தொடர்ந்து, தென்கொரியாவின் ஹன் சாங்ஜன் அந்நாட்டுக்காக ஒரு கோலை போட்டார். இதனால், போட்டி 3-1 என்ற நிலைக்கு சென்றது.
ஆனால், அதற்கு பின்னர் இந்தியாவின் கையே ஓங்கி இருந்தது. இதனால், ஆட்ட நேர முடிவில் இந்தியா, 8-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதேபோன்று மற்றொரு அரையிறுதியில், மலேசிய அணியை பெனால்டி ஷூட்அவுட் முறையில் 5-3 என்ற கோல் கணக்கில் ஜப்பான் வீழ்த்தியது. இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காமல் போட்டி டிரா ஆனது. இதனை தொடர்ந்து, பெனால்டி ஷூட்அவுட் கொண்டு வரப்பட்டது. நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ஜப்பான் அணியை இந்தியா எதிர்கொள்ள உள்ளது.