இந்திய மகளிர் ஆக்கி அணியின் முன்னாள் பயிற்சியாளர் குர்தியால் சிங் பாங்கு காலமானார்

இந்திய ஆக்கிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, துரோணாச்சார்யா விருது வழங்கப்பட்டது.
குர்தியால் சிங் பாங்கு
Published on: 

புதுடெல்லி,

2002-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் ஆக்கி அணி தங்கப் பதக்கம் வெல்ல முக்கியக் காரணமாக இருந்த முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் குர்தியால் சிங் பாங்கு காலமானார்.

வரலாறு

2002-ம் ஆண்டு இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் மகளிர் ஆக்கி இறுதிப்போட்டியில், இந்திய அணி போட்டியை நடத்திய இங்கிலாந்தை எதிர்கொண்டது.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்து சமநிலையில் இருந்தன. இதையடுத்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அப்போது இந்திய வீராங்கனை மம்தா கராப் அடித்த கோல் மூலம் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. காமன்வெல்த் போட்டிகளில் இந்திய மகளிர் ஆக்கி அணி வென்ற முதல் தங்கப் பதக்கம் இதுவாகும். இந்த வரலாற்று வெற்றியில் குர்தியால் சிங் பாங்குவின் வியூகம் முக்கிய பங்கு வகித்தது.

'சக் தே இந்தியா'

இந்திய மகளிர் அணியின் இந்த வரலாற்று வெற்றி, 2007-ம் ஆண்டு வெளியான ஷாருக்கானின் 'சக் தே இந்தியா' திரைப்படத்துக்கு முக்கிய உத்வேகமாக அமைந்தது.

அந்தப் படத்தில் ஷாருக்கான் நடித்த கபீர் கான் கதாபாத்திரம், முன்னாள் இந்திய கோல்கீப்பர் மீர் ரஞ்சன் நேகியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. 2002-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் அவர் இந்திய அணியின் கோல்கீப்பிங் பயிற்சியாளராகப் பணியாற்றினார். தலைமைப் பயிற்சியாளராக இருந்தவர் குர்தியால் சிங் பாங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

துரோணாச்சார்யா

1972 முதல் 1976 வரை நைஜீரிய மகளிர் ஆக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றிய குர்தியால் சிங் பாங்கு, அந்த அணி 1976 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற உதவினார்.

1998-ம் ஆண்டு இந்திய மகளிர் ஆக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வெல்லவும் வழிகாட்டினார்.

இவ்வாறு இந்திய ஆக்கிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, 2000-ம் ஆண்டு துரோணாச்சார்யா விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில், அவரது மறைவு இந்திய ஆக்கி உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X