

மும்பை,
2026 பெண்கள் ஆக்கி உலகக் கோப்பை தொடரில் 5-வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ள இந்திய பெண்கள் அணிக்கு ஆக்கி இந்தியா ரூ.50 லட்சம் பரிசு அறிவித்துள்ளது.
நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரில் உள்ள வாக்னர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற 5-வது இடத்திற்கான போட்டியில், உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 5-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனியை எதிர்கொண்டது. முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.
இரண்டாவது பாதியில் இந்திய அணி அதிரடியாக விளையாடியது. ஆட்டத்தின் 43-வது நிமிடத்தில் இஷிகா சவுத்ரி கோல் அடித்து இந்தியாவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.
இதனைத் தொடர்ந்து 44-வது நிமிடத்தில் நவ்னீத் கவுர் அடுத்த கோலை அடித்தார். பின்னர் 47-வது நிமிடத்தில் மீண்டும் நவ்னீத் கவுர் கோல் அடித்து இந்திய அணியின் முன்னிலையை 3-0 என உயர்த்தினார்.
போட்டி முடிவடையும் நேரத்தில் ஜெர்மனியின் லின் கிரிங்ஸ் 59-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இருப்பினும், அதன்பிறகு இந்திய அணியின் தடுப்பாட்டத்தை ஜெர்மனியால் உடைக்க முடியவில்லை. இறுதியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக் கோப்பையில் 5-வது இடத்தைப் பிடித்தது.
இந்த வெற்றி இந்திய பெண்கள் ஆக்கி அணிக்கு வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது. 1974-ம் ஆண்டு நடைபெற்ற முதல் ஆக்கி உலகக் கோப்பையில் இந்திய அணி 4-வது இடம் பிடித்திருந்தது. அதன்பிறகு தற்போது முதல்முறையாக இந்திய பெண்கள் அணி உலகக் கோப்பையில் டாப் 5-க்குள் இடம்பிடித்துள்ளது.
உலகக் கோப்பையில் 5-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்த இந்திய பெண்கள் ஆக்கி அணியை பாராட்டும் வகையில், ஆக்கி இந்தியா சார்பில் ரூ.50 லட்சம் ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.