யு-18 ஆசியக் கோப்பை ஆக்கி - ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா

இந்த தொடரில் மொத்தம் 13 கோல்கள் அடித்து அசத்திய ஆஷிஷ், இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
யு-18 ஆசியக் கோப்பை ஆக்கி - ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா
Published on

காகமிகஹரா,

ஜப்பானின் காகமிகஹரா நகரில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்டோருக்கான (சப்-ஜூனியர்) ஆசிய கோப்பை ஆக்கி தொடரில் இந்திய ஆண்கள் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.

இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஆதிக்கம்

நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஜப்பானை எதிர்கொண்ட இந்திய அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 34-வது நிமிடத்திற்குள் நான்கு கோல்களை அடித்து ஜப்பான் அணியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்திய வீரர் ஆஷிஷ் தானி புர்தி 2, 28 மற்றும் 34-வது நிமிடங்களில் ஹாட்ரிக் கோல் அடித்தார். கேப்டன் கேதன் குஷ்வஹா 30-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

பின்னர் போராடிய ஜப்பான் அணி 52-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தாலும், இந்தியாவின் வெற்றியை தடுக்க முடியவில்லை. இறுதியில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

ஆஷிஷ் தானி புர்திக்கு ஆட்டநாயகன் விருது

இந்த தொடரில் மொத்தம் 13 கோல்கள் அடித்து அசத்திய ஆஷிஷ் தானி புர்தி, இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

இந்தியாவின் மூன்றாவது ஆசிய கோப்பை

இந்தியா இந்த பட்டத்தை வெல்வது வரலாற்றில் மூன்றாவது முறையாகும். இதற்கு முன்பு 2001 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.

வீரர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு

இந்திய இளம் வீரர்களின் சிறப்பான செயல்பாட்டை பாராட்டிய ஹாக்கி இந்தியா அமைப்பு, சாம்பியன் பட்டம் வென்ற ஆண்கள் அணியின் ஒவ்வொரு வீரருக்கும் ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

மேலும், அணியின் பயிற்சி மற்றும் உதவி பயிற்சியாளர்களுக்கு தலா ரூ.1.4 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அதேபோல் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியின் ஒவ்வொரு வீராங்கனைக்கும் ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com