

ஹோபர்ட்,
சர்வதேச ஹாக்கி சம்மேளனம் நடத்தும் எப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் தொடரில் உலகின் முன்னணி அணிகள் மோதுகின்றன. அதன் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியா, ஸ்பெயின் மற்றும் இந்தியா அணிகள் பங்கேற்கும் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஹோபர்ட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதல் பாதியில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடினர். 15-வது நிமிடத்தில் அமித் ரோஹிதாஸ் கோல் அடித்தார். தொடர்ந்து 43-வது நிமிடத்தில் ஜுக்ராஜ் சிங் கோல் பதிவு செய்தார்.
பின்னர் 47 மற்றும் 56-வது நிமிடங்களில் ஆஸ்திரேலியாவின் ஜோயல் ரிந்தலா கோல்கள் அடித்து கணக்கை சமநிலைக்கு கொண்டுவந்தார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட நேர முடிவில் 2-2 என சமநிலையில் இருந்தது.
இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில் 5-4 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இந்த தோல்வியால் புரோ லீக் தொடரில் இந்தியா தொடர்ந்து 5-வது ஆட்டத்திலும் தோல்வி கண்டுள்ளது. இதற்கு முன் ஹோபர்ட்டிலேயே ஸ்பெயின் அணியிடமும் இந்தியா தோல்வியடைந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெறும் அடுத்த ஆட்டத்தில் இந்தியா மீண்டும் ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது.