

லாசானே,
12-வது ஜூனியர் ஆண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 24-ந் தேதி முதல் டிசம்பர் 5-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டிக்கான அட்டவணையை சர்வதேச ஆக்கி சம்மேளனம் நேற்று அறிவித்தது. இந்த போட்டியில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் பெல்ஜியம், சிலி, மலேசியா, தென்ஆப்பிரிக்கா, பி பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, கனடா, பிரான்ஸ், போலந்து, சி பிரிவில் தென்கொரியா, நெதர்லாந்து, ஸ்பெயின், அமெரிக்கா, டி பிரிவில் அர்ஜென்டினா, எகிப்து, ஜெர்மனி, பாகிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.
தொடக்க நாளில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் பெல்ஜியம்-தென்ஆப்பிரிக்கா, மலேசியா-சிலி, ஜெர்மனி-பாகிஸ்தான், கனடா-போலந்து, இந்தியா-பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது எஞ்சிய லீக் ஆட்டங்களில் 25-ந் தேதி கனடாவையும், 27-ந் தேதி போலந்தையும் எதிர்கொள்கிறது.
இதேபோல் தென்ஆப்பிரிக்காவில் டிசம்பர் 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெறும் ஜூனியர் பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டிக்கான அட்டவணையும் நேற்று வெளியிடப்பட்டது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. இந்திய அணி சி பிரிவில் இடம் பிடித்துள்ளது. நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, ஜப்பான், ரஷியா ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். இந்திய அணி தனது லீக் ஆட்டங்களில் டிசம்பர் 6-ந் தேதி ரஷியாவையும், 7-ந் தேதி அர்ஜென்டினாவையும், 9-ந் தேதி ஜப்பானையும் சந்திக்கிறது.