

புதுடெல்லி,
16-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி நாளை (15-ந் தேதி) முதல் 30-ந் தேதி வரை பெல்ஜியம் (வாவ்ரே) மற் றும் நெதர்லாந்தில் (ஆம்ஸ்டெல்வின்) நடக்கிறது. இதன் ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, முன்னாள் சாம்பியன்கள் பாகிஸ்தான், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், இந்தியா உள்பட 16 அணிகளும், பெண்கள் பிரிவில் நடப்பு மற்றும் 9 முறை சாம்பியனான நெதர்லாந்து. முன்னாள் சாம்பியன்களான அர்ஜென்டினா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா உள்பட 16 அணிகளும் பங்கேற்கின்றன. இந்திய ஆண்கள் அணி தனது முதலாவது ஆட்டத்தில் நாளை வேல்சை சந்திக்கிறது. இந்திய பெண்கள் அணி தனது தொடக்க ஆட்டத்தில் நாளை மறுநாள் சீனாவை எதிர்கொள்கிறது.
இந்திய பெண்கள் அணி இதுவரை பதக்க மேடையை எட்டியது கிடையாது. இந்த நிலையில் இந்திய பெண்கள் அணி இந்த தடவை முதல்முறையாக பதக்கம் வெல்லும் (முதல் 3 இடங்கள்) என்று இந்திய அணியின் கோல்கீப்பர் சவிதா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகை யில், 'சமீபத்தில் நடந்த நேஷன்ஸ் கோப்பை போட்டியில் வென்றது சாதனையாகும். முன்னணி அணிகள் பங்கேற்ற அந்த போட்டியில் நாங்கள் முதலிடத்தை பிடித்தது மிகுந்த ஊக்கமளித்தது. நீண்ட காலத்துக்கு பிறகு தங்கப்பதக்கத்தை வென்றது அணியின் மனஉறுதியை யும், நம்பிக்கையையும் அதிகரித்துள்ளது. புரோ ஆக்கி லீக் தொடரில் அர்ஜென்டினா, நெதர் லாந்து, ஜெர்மனி போன்ற முன்னணி அணிகளுக்கு எதிராக நாங்கள் மிகவும் நெருக்கமான போட்டியை வெளிப்படுத்தினோம். அந்த ஆட்டங்கள் உலகின் சிறந்த அணிகளுக்கு நிகராக விளையாட முடியும் என்பதை எங்களுக்கு காட்டின. தற்போதைய இந்திய அணிக்கு தங்களுக்குரிய நாளில் எந்தவொரு அணிக்கும் சவால் அளிக்கும் திறமையும், உடல் தகுதியும், மனோதிடமும் இருக்கிறது என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். நாங்கள் உலகக் கோப்பை போட்டியில் மிகுந்த நம்பிக்கையுடன் நுழைகிறோம். என தெரிவித்தார்.