

போபால்,
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2026 ஆக்கித் தொடரின் இறுதிப்போட்டியில் சீனாவை 3–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதன் மூலம் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும், ஒட்டுமொத்தமாக நான்காவது முறையாகவும் கோப்பையை கைப்பற்றி இந்திய மகளிர் அணி சாதனை படைத்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள நாது பார்கேடா சர்வதேச விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, சீனாவை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் சீனா 1–0 என முன்னிலை பெற்றது.
இதையடுத்து இரண்டாவது பாதியில் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய அணி, அடுத்தடுத்து கோல்களை அடித்து ஆட்டத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இந்திய அணிக்காக தீபிகா இரண்டு கோல்களும், இஷிகா ஒரு கோலும் அடித்தனர். இதன் மூலம் சீனாவை 3–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இதற்கு முன்பு 2016, 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்றிருந்தது. தற்போது 2026-ம் ஆண்டிலும் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம், இத்தொடரில் அதிக முறை கோப்பையை வென்ற அணியாக இந்தியா சாதனை படைத்துள்ளது.