ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி - சீன தைபேவை புரட்டியெடுத்த இந்தியா... அரையிறுதிக்கு முன்னேற்றம்

இந்தியாவின் அன்மோல் எக்கா அபாரமாக விளையாடி 6 கோல்களை அடித்து அசத்தினார்.
ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி
Published on

மோகி,

ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி தொடரில் சீன தைபேவை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

லீக் சுற்று

ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கிப் போட்டி சீனாவின் மோகி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தலா 10 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றன.

இமாலய வெற்றி

இத்தொடரில் ‘ஏ’ பிரிவில் இன்று நடைபெற்ற தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய ஆண்கள் அணி சீன தைபேவை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, சீன தைபே அணியை ஒரு கோல் கூட அடிக்கவிடவில்லை.

இறுதியில் இந்திய அணி 15-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு கம்பீரமாக முன்னேறியுள்ளது. இதில், இந்தியாவின் அன்மோல் எக்கா அபாரமாக விளையாடி 6 கோல்களை அடித்து அசத்தினார்.

பிரிவில் முதலிடம்

5 முறை சாம்பியனான இந்திய அணி, லீக் சுற்றில் 3 வெற்றிகள் மற்றும் ஒரு டிராவுடன் 10 புள்ளிகளைப் பெற்று ‘ஏ’ பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளது.

மற்றொரு லீக் ஆட்டத்தில் ஜப்பானை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய தென்கொரியா, 9 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஜப்பான், இந்தோனேசியா மற்றும் சீன தைபே அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com