

மோகி,
ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கியில் இந்திய ஆண்கள் அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
11-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் மோகி நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியனான தென்கொரியாவை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது.
இந்திய அணியில் அஜீத் யாதவ் (9-வது நிமிடம்) கேப்டன் அன்மோல் எக்கா (13-வது நிமிடம்), பிரப்தீப் சிங் (21-வது நிமிடம்), அஷூ மவுரியோ (50-வது நிமிடம்) ஆகியோர் கோலடித்தனர். நடப்பு தொடரில் இந்திய கேப்டன் அன்மோல் எக்காவுக்கு இது 17-வது கோலாகும். தென்கொரியா தரப்பில் கேப்டன் லீ மின்யோக் 54-வது நிமிடத்தில் பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பில் ஆறுதல் கோல் அடித்தார். இந்தியா பட்டத்தை வெல்வது இது 6-வது முறையாகும். இதற்கு முன்பு 2004. 2008, 2015, 2023, 2024 ஆகிய ஆண்டுகளிலும் வாகை சூடியிருந்தது. வேறு எந்த அணியும் 3 முறைக்கு மேல் வென்றதில்லை.
முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பாகிஸ்தான் 4-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை பெற்றது. இந்தியா உள்பட டாப் 4 இடங்களை பிடித்த அணிகள் ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி போட்டிக்கு தகுதி பெற்றன.
பெண்கள் பிரிவின் இறுதி சுற்றில் நடப்பு சாம்பியனான இந்தியா, உள்ளூர் அணியான சீனாவுடன் மல்லுக்கட்டியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 17-வது நிமிடத்தில் இந்தியாவின் சனிகா சந்திரகாந்த் மானே கோலடித்து முன்னிலை ஏற்படுத்தி தந்தார். பதிலடி கொடுக்க சீன வீராங்கனைகள் கடுமையாக போராடினார்கள். பல முறை நெருங்கி வந்த போதிலும் இந்திய வீராங்கனைகள் தற்காப்பு ஆட்டத்தில் அருமையாக செயல்பட்டு அசத்தினர்.
முடிவில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் கோப்பையை சொந்தமாக்கி 'ஹாட்ரிக்' சாதனை படைத்தது. 2023, 2024-ம் ஆண்டுகளிலும் பட்டத்தை வென்றிருந்தது. அத்துடன் ஜூனியர் உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி அடைந்தது.
ஆசிய போட்டியில் மீண்டும் கோலோச்சிய இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஆக்கி இந்தியா அமைப்பு, பட்டம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.3 லட்சமும், பயிற்சியாளர் மற்றும் உதவியாளர்களுக்கு தலா ரூ.1.5 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.