ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி: இந்திய அணி கோல்மழை

ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் நேற்று சீனதைபேயை எதிர்கொண்டது.
image courtesy: HI via ANI
image courtesy: HI via ANI
Published on

சலாலா,

10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஓமனின் சலாலா நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. வருகிற 1-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், மலேசியா, தென்கொரியா உள்பட 10 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இதில் நடப்பு சாம்பியனான இந்தியா 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், ஜப்பான், தாய்லாந்து, சீனதைபே அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் நேற்று சீனதைபேயை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே முழுமையாக ஆதிக்கம் செலுத்தி கோல்மழை பொழிந்த இந்தியா 18-0 என்ற கோல் கணக்கில் சீனதைபேயை பந்தாடியது. இந்திய அணியில் 10 பேர் கோல் அடித்தனர். இதில் அராஜீத் சிங் ஹன்டல் 4 கோலும், அமன்தீப் 3 கோலும் போட்டு கவனத்தை ஈர்த்தனர். இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் இன்று ஜப்பானை சந்திக்கிறது.

இந்த தொடரில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் டிசம்பர் மாதம் மலேசியாவில் நடக்கும் ஜூனியர் உலகக்கோப்பை ஆக்கி போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com