"என் பயோபிக்கில் அவர்தான் நடிக்க வேண்டும்" - மனம் திறந்த இந்திய ஆக்கி வீராங்கனை சவிதா

சவிதா புனியா, தனது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டால் அதில் யார் நடிக்க வேண்டும் என்பது குறித்துப் பேசினார்.
சவிதா புனியா
Published on: 

புதுடெல்லி,

இந்திய மகளிர் ஆக்கி அணியின் நட்சத்திர கோல் கீப்பரான சவிதா புனியா, தனது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டால் அதில் நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

தங்கம் வென்ற இந்திய அணி

சமீபத்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் ஆக்கி அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தது. இந்த வெற்றியில் கோல் கீப்பர் சவிதா புனியாவின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.

பிரியங்கா சோப்ரா எனக்கு விருப்பமானவர்

பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள சவிதா புனியா, தனது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டால் அதில் யார் நடிக்க வேண்டும் என்பது குறித்துப் பேசினார்.

அவர் கூறுகையில், “எனது வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு திரைப்படம் எடுப்பார்கள் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. அப்படி ஒரு படம் எடுக்கப்பட்டால், அதில் பிரியங்கா சோப்ரா நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அவர் எனது கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்ப்பார் என்று நினைக்கிறேன்.

பிரியங்காவின் வாழ்க்கைப் பயணத்தைப் பார்க்கும்போது எனக்கு உத்வேகம் கிடைக்கிறது. எனக்கு இசை கேட்பதும் புத்தகங்கள் படிப்பதும் பிடிக்கும். தினமும் அனுமன் பாடல்களைக் கேட்ட பிறகே எனது நாளைத் தொடங்குவேன்.

நான் அதிகமான திரைப்படங்களைப் பார்ப்பதில்லை. இதுவரை 8 அல்லது 9 படங்கள்தான் பார்த்திருக்கிறேன். கடைசியாக தீபிகா படுகோன் நடித்த ‘சப்பாக்’ திரைப்படத்தைப் பார்த்தேன்” என்றார்.

மேரி கோம்

நடிகை பிரியங்கா சோப்ரா, ஏற்கெனவே இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு 2014-ல் வெளியான திரைப்படத்தில் அவராகவே நடித்திருந்தார். தற்போது இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலியின் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தனது வாழ்க்கை வரலாற்று படம் எடுக்கப்பட்டால் பிரியங்கா சோப்ரா நடிக்க வேண்டும் என்று சவிதா புனியா தெரிவித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com