

இந்தியா தாய்லாந்தை பந்தாடி ‘ஹாட்ரிக்’வெற்றியை சுவைத்ததுடன், அரைஇறுதியையும் உறுதி செய்தது.
போபால்,
9-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி மத்தியபிரதேச தலைநகர் போபாலில் உள்ள சர்வதேச விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதியை எட்டும்.
தனது முதல் இரு ஆட்டங்களில் மலேசியா, தென்கொரியாவை போட்டுத்தாக்கிய நடப்பு சாம்பியனான இந்திய அணி நேற்று தாய்லாந்துடன் மோதியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா 7-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை பந்தாடி 'ஹாட்ரிக்' வெற்றியை சுவைத்ததுடன், அரைஇறுதியையும் உறுதி செய்தது. தீபிகா (10, 11, 56-வது நிமிடம்) 3 கோலும், நவ்னீத் கவுர் 2 கோலும் (4, 56-வது நிமிடம்), மும்தாஸ் கான் (28), சுனேலிதா தோப்போ (32) தலா ஒரு கோலும் அடித்தனர். இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை சீனாவை எதிர்கொள்கிறது.
மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான் 3-1 என்ற கோல் கணக்கில் சீனாவை சாய்த்து 3-வது வெற்றியோடு அரைஇறுதிக்குள் கால்பதித்தது. இதே போல் மலேசியா 3-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை பதம்பார்த்து முதலாவது வெற்றியை பெற்றது.