

பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் 3 முறை சாம்பியனான இந்திய அணி, மலேசியாவுடன் மோதி வெற்றி பெற்றது.
9-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி மத்தியபிரதேச தலைநகர் போபாலில் உள்ள சர்வதேச விளையாட்டு வளாகத்தில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, 3 முறை சாம்பியனான தென்கொரியா உள்பட 6 அணி களும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங் களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
தொடக்க நாளில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான இந்திய அணி, மலேசியாவுடன் மோதியது. இதில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் நுராமிர்ரா சுல்கிபி 19-வது நிமிடத்தில் அடித்த கோலால் மலேசியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால் அடுத்த நிமிடத்திலேயே (20-வது நிமிடம்) மும்தாஜ் கான் திருப்பிய கோலால் இந்தியா சமநிலையை (1-1) எட்டியது. அதன் பிறகு தங்களது தாக்குதல் வேகத்தை அதிகரித்த இந்திய அணி கடும் நெருக்கடி அளித்தது. அதன் பல னாக கேப்டன் சலிமா டெடி 35-வது நிமிடத்திலும், பூஜா சாஹோ 39-வது நிமிடத்திலும், லால் ரெம்சியாமி 49-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் போட்டனர். முடிவில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை தோற்கடித்து போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.
முன்னதாக நடந்த ஒரு ஆட்டத்தில் சீன அணி 7-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை பந்தாடியது. மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை பதம் பார்த்தது.
போட்டி தொடரில் இன்று ஓய்வு நாளாகும். நாளை நடைபெறும் ஆட்டங்களில் சீனா-மலேசியா (பிற்பகல் 2.30 மணி), தாய்லாந்து-ஜப்பான் (மாலை 4.45 மணி), இந்தியா-தென்கொரியா (இரவு 7 மணி) அணிகள் மோதுகின்றன.