புரோ கைப்பந்து போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி

புரோ கைப்பந்து போட்டியில் ஆமதாபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி வெற்றிபெற்றது.
Published on

கொச்சி,

முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சியில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், யு மும்பா வாலி (மும்பை), கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை ஸ்பார்ட்டன்ஸ், ஆமதாபாத் டிபென்டர்ஸ், ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் கொச்சியில் நேற்று இரவு நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ்-ஆமதாபாத் டிபென்டர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி, மாறி 2 செட்களை தன்வசப்பத்தியது. இதனால் வெற்றி யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது செட்டில் அனல் பறந்தது. முடிவில் ஐதராபாத் அணி 15-11, 13-15, 15-11, 14-15, 15-9 என்ற செட் கணக்கில் ஆமதாபாத்தை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது.

இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் ஜெரோம் வினித் தலைமையிலான கோழிக்கோடு ஹீரோஸ் அணி, திபேஷ் சின்ஹா தலைமையிலான யு மும்பா வாலி (மும்பை) அணியை எதிர்கொள்கிறது. கோழிக்கோடு அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி இருந்தது. மும்பை அணி தொடக்க லீக் ஆட்டத்தில் கொச்சி அணியிடம் தோல்வி கண்டு இருந்தது. இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com