நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: லபுஸ்சேன் இரட்டை சதத்தால் ஆஸ்திரேலிய அணி 454 ரன்கள் குவிப்பு

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் லபுஸ்சேன் இரட்டை சதத்தால் ஆஸ்திரேலிய அணி 454 ரன்கள் குவித்தது.
Published on

சிட்னி,

ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் முதல் நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்து இருந்தது. லபுஸ்சேன் 130 ரன்னுடனும், மேத்யூ வேட் 22 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. லபுஸ்சேன், மேத்யூ வேட் ஆகியோர் தொடர்ந்து ஆடினார்கள். முதல் ஓவரிலேயே மேலும் ரன் எதுவும் சேர்க்காமல் மேத்யூ வேட் (22 ரன்) சோமர்வில்லே பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து வந்த டிராவிஸ் ஹெட் (10 ரன்) மேட் ஹென்றி பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் வாட்லிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதனை அடுத்து கேப்டன் டிம் பெய்ன், லபுஸ்சேனுடன் ஜோடி சேர்ந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் லபுஸ்சேன் நிலைத்து நின்று நிதானமாக விளையாடினார். அணியின் முதுகெலும்பாக செயல்பட்ட லபுஸ்சேன் 346 பந்துகளில் தனது முதலாவது இரட்டை சதத்தை எட்டினார். இதன் மூலம் அவர் இந்த ஆண்டில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

அணியின் ஸ்கோர் 410 ரன்னாக உயர்ந்த போது டிம் பெய்ன் (35 ரன்கள்) கிரான்ட்ஹோம் பந்து வீச்சில் போல்டாகி நடையை கட்டினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லபுஸ்சேன், டாட் ஆஸ்டில் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். லபுஸ்சேன் 363 பந்துகளில் 19 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 215 ரன்கள் சேர்த்தார். அவரது அதிகபட்ச ரன் இதுவாகும். லபுஸ்சேன் தனது கடைசி 5 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 837 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் 5 டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சிறப்பை தனதாக்கினார். 60 ஆண்டுகளுக்கு முன்னதாக ஆஸ்திரேலிய வீரர் நீல் ஹார்வி 5 டெஸ்டுகளில் 834 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த சாதனையை லபுஸ்சேன் தகர்த்தார்.

பின்னர் வந்த பேட்டின்சன் (4 ரன்), கம்மின்ஸ் (8 ரன்), மிட்செல் ஸ்டார்க் (22 ரன்) ஆகியோர் விரைவில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 150.1 ஓவர்களில் 454 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. நாதன் லயன் 6 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணியின் கடைசி 5 விக்கெட்டுகள் 44 ரன்களுக்குள் சரிந்தது. நியூசிலாந்து அணி தரப்பில் நீல் வாக்னெர், கிரான்ட்ஹோம் தலா 3 விக்கெட்டும், டாட் ஆஸ்டில் 2 விக்கெட்டும், மேட் ஹென்றி, சோமர்வில்லே தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 29 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்தது. பொறுப்பு கேப்டன் டாம் லாதம் 26 ரன்னுடனும், டாம் பிளன்டெல் 34 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com