செஸ் ஒலிம்பியாட் போட்டி உஸ்பெகிஸ்தானில் இன்று தொடக்கம்

ஒவ்வொரு சுற்றும் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி உஸ்பெகிஸ்தானில் இன்று தொடக்கம்
Published on

சமர்கண்ட்,

செஸ் ஒலிம்பியாட் போட்டி உஸ்பெகிஸ்தானில் இன்று தொடங்குகிறது. பட்டத்தை தக்க வைக்கும் முனைப்புடன் இந்திய அணியினர் களமிறங்குகின்றனர்.

2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள்

செஸ் விளையாட்டில் மிகப்பெரிய போட்டியான செஸ் ஒலிம்பியாட் 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன்படி 46-வது செஸ் ஒலிம்பியாட் உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் இன்று தொடங்கி 27-ந்தேதி வரை நடக்கிறது. இதில் சாதனை எண்ணிக்கையாக ஓபன் பிரிவில் 208 அணிகளும், பெண்கள் பிரிவில் 192 அணிகளும் கலந்து கொள்கின்றன. அதாவது ஏறக்குறைய 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் களம் காணுகிறார்கள்.

மொத்தம் 11 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ரவுண்டிலும் வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளியும், டிராவுக்கு தலா ஒரு புள்ளியும் வழங்கப்படும். முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கம் அளிக்கப்படும்.

ஸ்விஸ் முறையில் நடைபெறும் இந்த செஸ் திருவிழாவில் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் தலா 1½ மணி நேரம் ஒதுக்கப்படும். 40-வது காய் நகர்த்தலுக்கு பிறகு எஞ்சிய ஆட்டத்துக்கு 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். அத்துடன் தொடக்கத்தில் இருந்து ஒவ்வொரு நகர்வுக்கும் 30 வினாடி வீதம் அதிகரித்துக் கொண்டே போகும். ஒரு அணியில் 4 பேர் இருப்பார்கள். அவர்கள் எதிரணியினருடன் மோதுவார்கள்.

பிரக்ஞானந்தா- குகேஷ்

உலக செஸ் தரவரிசையில் டாப்-10 இடங்களில் உள்ள வீரர்களில் 8 பேர் இந்த போட்டியில் ஆடுகிறார்கள். நம்பர் ஒன் வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), அமெரிக்காவின் ஹிகரு நகமுரா மட்டும் விலகி விட்டனர்.

ஹங்கேரியில் 2024-ம் ஆண்டில் நடந்த செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய ஆண்கள் அணி முதல்முறையாக தங்கப்பதக்கத்தை வென்று வரலாறு படைத்தது. இந்த முறையும் உலக சாம்பியனான தமிழகத்தை சேர்ந்த குகேஷ், சமீபத்தில் கிராண்ட் செஸ் டூரில் பட்டம் வென்று சூப்பர் பார்மில் உள்ள பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, நிஹால் சரின் மற்றும் மாற்று வீரர் விதித் குஜராத்தி ஆகிய நட்சத்திர வீரர்கள் அணியில் இடம் பெற்றிருப்பதால், இந்தியா பட்டத்தை தக்கவைப்பதற்கு வாய்ப்புள்ளது.

ஸ்ரீநாத் நாராயணன்

கேப்டனாக ஸ்ரீநாத் நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். அதே சமயம் ஜவோகிர் சிந்தாரோவ் தலைமையிலான உஸ்பெகிஸ்தான், பேபியானோ கருணா, லெவோன் ஆரோனியன் ஆகியோரை உள்ளடக்கிய அமெரிக்கா மற்றும் சீனா அணிகளும் வலுவாக காணப்படுவதால் இந்தியாவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

ஹம்பி- வைஷாலி

பெண்கள் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியாவுக்கு போட்டித் தரநிலையில் முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. கோனெரு ஹம்பி, உலக கோப்பையை வென்றவரான திவ்யா தேஷ்முக், வைஷாலி, வந்திகா அகர்வால் மற்றும் மாற்று வீராங்கனை சவிதா ஸ்ரீ ஆகியோர் இந்திய அணியில் அங்கம் வகிக்கிறார்கள். முந்தைய ஒலிம்பியாட்டில் ஆடிய அனுபவம் வாய்ந்த ஹரிகா துரோணவள்ளி இந்த முறை தனிப்பட்ட காரணங்களுக்காக விலகி விட்டார். பெண்கள் பிரிவை பொறுத்தமட்டில் ஜார்ஜியா, கஜகஸ்தான், சீனா கவனிக்கத்தக்க அணிகளாக இருந்தாலும் இந்தியாவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவுக்கு நீடிக்கும் தடை

உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷியாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பதால், இந்த முறையும் அந்த அணிக்கு அனுமதி இல்லை.

ஒவ்வொரு சுற்றும் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com