

நியூயார்க்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 21 கி.மீ. தொலைவை உள்ளடக்கிய ஆடவர் அரை மாரத்தான் போட்டி இன்று நடந்தது. இதில், இந்தியாவின் நட்சத்திர ஓட்ட பந்தய வீரரான குல்வீர் சிங் (வயது 27) கலந்து கொண்டார்.
போட்டியில் அவர், தேசிய சாதனையை முறியடித்து இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளார். நடப்பு ஆண்டுக்கான ஆடவர் அரை மாரத்தான் போட்டியில் (59.42) 3-வது இடம் பிடித்து உள்ளார். தென் ஆப்பிரிக்காவின் ஆத்ரியன் வைல்ட்ஸ்கட் முதல் இடமும் (59.30), மொராக்கோ நாட்டில் பிறந்தவரான அமெரிக்கர் ஜவ்ஹைர் தல்பி (59.41) 2-வது இடமும் பிடித்தனர்.
2020-ம் ஆண்டு டெல்லியில் நடந்த அரை மாரத்தான் போட்டியில், இந்திய வீரரான அவினாஷ் சேபிள் (1.00.30) படைத்த சாதனையை குல்வீர் முறியடித்து உள்ளார். இவர், பல்வேறு தேசிய சாதனைகளை படைத்த இந்தியாவின் முதல் நீண்ட தூர ஓட்ட பந்தய வீரர் என்ற சாதனையை வைத்திருக்கிறார். 3 ஆயிரம் மீட்டர் முதல் 25 கி.மீ. பந்தயம் வரையும் சாதனை படைத்துள்ளார்.
இதேபோன்று, ஆடவர் 5 ஆயிரம் மீட்டர் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் சாதனை பதிவுகளையும் வைத்திருக்கிறார். ஆசியன் போட்டிகளில் பதக்கம் வென்றவரான இவர், ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில், 5 ஆயிரம் மீட்டர் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் என இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.
அடுத்து, நடப்பு ஆண்டில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிகள் மற்றும் ஆசியன் போட்டிகளில் பதக்கம் வெல்லும் நம்பிக்கையில் உள்ளார்.