

கலிபோர்னியா,
சிலிகான் வேலி ஓபன் ஸ்குவாஷ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய இளம் வீராங்கனை அனஹத் சிங் தோல்வியடைந்தார்.
சிலிகான் வேலி ஓபன் ஸ்குவாஷ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில், அரையிறுதிப் போட்டியில் 18 வயதான இந்திய இளம் வீராங்கனை அனஹத் சிங், உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள மலேசியாவின் சிவசங்கரியை எதிர்கொண்டார்.
போட்டியின் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய அனஹத், முதல் ஆட்டத்தை 11-5 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
ஆனால், அடுத்தடுத்த ஆட்டங்களில் அதிரடியாக விளையாடிய சிவசங்கரி, 11-6, 11-4, 11-7 என்ற கணக்கில் தொடர்ந்து மூன்று ஆட்டங்களையும் வென்றார்.
37 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் 5-11, 11-6, 11-4, 11-7 என்ற கேம் கணக்கில் சிவசங்கரி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
ஜப்பானில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியிலும் சிவசங்கரியிடம் தோல்வியடைந்த அனஹத் சிங், தங்கப் பதக்கத்தைத் தவறவிட்டிருந்தார். தற்போது சிலிகான் வேலி ஓபன் அரையிறுதியிலும் அவரிடமே தோல்வியடைந்துள்ளார்.
இருப்பினும், இந்தத் தொடரில் அனஹத் சிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 8 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற நூர் எல் ஷெர்பினியை வீழ்த்திய அவர், காலிறுதியில் எகிப்தின் சல்மா ஹனியைத் தோற்கடித்து முதல்முறையாக பிஎஸ்ஏ தங்கநிலைத் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறினார்.