

உலான்பத்தார்,
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி மங்கோலியா தலைநகர் உலான்பத்தாரில் நடந்து வருகிறது. இதில் இந்தியர்கள் வெகுவாக ஆதிக்கம் செலுத்துகிறார்கள். நேற்று நடந்த பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில் இந்திய வீராங்கனை மீனாட்சி ஹூடா 4-1 என்ற கணக்கில் தாய்லாந்தின் திப்சாட்சா யோத்வாரீயை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
57 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை ஜேஸ்மின் லம்போரியா 3-2 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் நிகினா உக்தமோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். அவர் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் தாய்லாந்தின் புன்ரவீ ருயென்ரோசை எதிர்கொள்கிறார்.
ஆண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாத் சுரேஷ் 5-0 என்ற கணக்கில் ஹூதைபா எஷிசை (ஜோர்டான்) துவம்சம் செய்து இறுதிப்போட்டியை எட்டினார். விஸ்வநாத் முந்தைய சுற்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான சன்ஜார் தாஷ்கன்பேவுக்கு (கஜகஸ்தான்) அதிர்ச்சி அளித்து இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
60 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில், உலகக் கோப்பையில் பதக்கம் வென்றவரான இந்திய வீரர் சச்சின் சிவாச் 4-1 என்ற கணக்கில் தாய்லாந்தின் சாக்தா ருவாம்தமை சாய்த்தார்.
மற்ற அரையிறுதி ஆட்டங்களில் 75 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ஆகாஷ் 1-4 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் அப்துரகிமோவிடமும், 85 கிலோ பிரிவில் இந்தியாவின் லோகேஷ் 0-5 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் ஜசுர்பெக் யுல்டோஷேவிடமும், 90 கிலோவுக்கு மேற்பட்ட எடைப்பிரிவில் நரேந்தர் 1-4 என்ற கணக்கில் சீனாவின் பாயிகெவுசி டானாபியெக்கிடமும், 90 கிலோ பிரிவில் ஹர்ஷ் சவுத்ரி 1-4 என்ற கணக்கில் தஜிகிஸ்தானின் பர்விஸ் கரிமோவிடமும் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி கண்டனர்.
இந்த போட்டி தொடரில் இந்தியாவை சேர்ந்த 6 வீராங்கனைகள், 2 வீரர்கள் இறுதிப்போட்டியில் களம் காணுகிறார்கள்.