இந்தோனேசியா, ஜப்பானுக்கு எதிராக அசத்தல் வெற்றி... ஆக்கி, கபடியில் மிரட்டிய இந்தியா

இந்திய ஆண்கள் கபடி அணி வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கியுள்ளது.
இந்தோனேசியா, ஜப்பானுக்கு எதிராக அசத்தல் வெற்றி... ஆக்கி, கபடியில் மிரட்டிய இந்தியா
Published on

நகோயா,

இந்திய பெண்கள் ஆக்கி மற்றும் ஆண்கள் கபடி அணிகள் இன்று நடைபெற்ற போட்டிகளில் அபார வெற்றிகளைப் பதிவு செய்தன.

இந்தோனேசியாவை துவம்சம் செய்த இந்தியா

20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகின்றன. இதில், இந்திய பெண்கள் ஆக்கி அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் இன்று இந்தோனேசியாவை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, ஆட்ட நேர முடிவில் 17-1 என்ற கோல் கணக்கில் இந்தோனேசியாவை வீழ்த்தியது.

இந்திய அணிக்காக நவநீத், ரூதுஜா மற்றும் தீபிகா ஆகியோர் தலா 3 கோல்கள் அடித்தனர். சாட்சி, சுனெலிதா மற்றும் லால்ரெம்சியாமி ஆகியோர் தலா 2 கோல்களும், இஷிகா மற்றும் சலிமா டேடே ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

முன்னதாக தனது முதல் ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தானை 19-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியிருந்தது.

ஜப்பானை வீழ்த்திய இந்திய கபடி அணி

இதனிடையே, இந்திய ஆண்கள் கபடி அணி தனது ஆசிய விளையாட்டுப் பயணத்தை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று ஜப்பானை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள், ஆட்டத்தின் முடிவில் 49-24 என்ற புள்ளிக் கணக்கில் ஜப்பானை வீழ்த்தினர்.

இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆண்கள் கபடி அணி வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com