

நகோயா,
20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஆண்கள் கபடி அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி, தொடர்ந்து 4-வது ஆசிய விளையாட்டு தங்கப் பதக்கத்தை நோக்கி பயணிக்கிறது.
‘ஏ’ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி, முதலில் ஜப்பானை 49-24 என்ற கணக்கில் வீழ்த்தியது. தொடர்ந்து தென் கொரியாவை 63-31 என்ற கணக்கிலும், வங்காளதேசத்தை 48-25 என்ற கணக்கிலும் வென்றது.
இன்று நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் 36-19 என்ற சீன தைபே அணியையும் வீழ்த்தி, இந்தியா தனது வெற்றிப் பயணத்தை தொடர்ந்தது.
இந்திய அணிக்கு சுனில் குமார் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். பவன் செராவத், அர்ஜுன் தேஷ்வால், தேவாங்க் தலால் உள்ளிட்ட வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆண்கள் கபடியில் இந்தியா இதுவரை 8 முறை தங்கப் பதக்கம் வென்றுள்ளது. 2026 ஆசிய விளையாட்டிலும் தங்கம் வெல்லும் நோக்கத்துடன் இந்திய அணி அடுத்த கட்டத்துக்கு முன்னேறியுள்ளது.