

புதுடெல்லி,
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனை யான வினேஷ் போகத் 2024-ம் ஆண்டு பாரீ சில் நடந்த ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டி வரை முன்னேறி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். கடைசி நேரத்தில் அவரது உடல் எடை 50 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர் தற்போது ஓய்வு முடிவை திரும்ப பெற்று 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வகையில் மீண்டும் மல்யுத்த போட்டியில் களம் இறங்க திட்டமிட்டுள்ளார். ஆனால் ஊக்கமருந்து தடுப்பு விதிகளின்படி ஓய்வில் இருந்து திரும்புபவர்கள் 6 மாதங்களுக்கு முன்பே முறைப்படி தெரிவிக்க வேண்டும் என்ற விதிமுறையை மீறியதாக கூறி ஜூன் 26-ந் தேதி வரை உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வினேஷ் போகத்துக்கு இந்திய மல்யுத்த சம்மேளனம் தடை விதித்தது.
இதற்கிடையே, இந்த ஆண்டு நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய மல்யுத்த அணி தேர்வு நடைமுறையில் திடீர் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. புதிய விதிமுறையின்படி 2025 மற்றும் நடப்பு ஆண்டில் குறிப்பிட்ட சில தேசிய போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் தான் இந்திய அணி தேர்வில் கலந்து கொள்ள முடியும் என்று அறிவிக் கப்பட்டது. இதனால் அந்த காலகட்டத்தில் மகப்பேறு விடுப்பில் இருந்ததால் போட்டிகளில் பங்கேற்காத வினேஷ் போகத் வருகிற 30, 31-ந் தேதிகளில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிக்கான தேர்வு போட்டியில் கலந்து கொள்ள தகுதியில்லை என்று மல்யுத்த சம்மேளனம் அறிவித்தது. இதனை எதிர்த்து வினேஷ் போகத் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதைத்தொடர்ந்து அவர் அப்பீல் செய்தார்.
வினேஷ் போகத்தின் அப்பீல் மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஆசிய விளையாட்டு மல்யுத்த போட்டிக்கான அணி தேர்வுக்கு வருகிற 30, 31 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் தகுதி போட்டியில் வினேஷ் போகத் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட னர்.