ஆசிய விளையாட்டு: கபடியில் அசத்தல்... கராத்தே, ஏர் ரைபிளில் பதக்கம் நழுவியது!

10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு குழு பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் நழுவியது.
ஆசிய விளையாட்டு
Published on

ஐச்சி-நகோயா,

ஆசிய விளையாட்டுப்போட்டியில் இந்திய கபடி அணி தென்கொரியாவை துவம்சம் செய்தது.

ஏர் ரைபிள்

ஜப்பானின் அய்ச்சி-நகோயா நகரில் 20-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு குழு பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் நழுவியது.

தகுதிச்சுற்றில் 634.9 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்த இளவேனில் வாலறிவன் - பார்த்த் மானே இணை, இறுதிப்போட்டியில் 376.3 புள்ளிகளுடன் 4-வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தது.

டென்னிஸ்

டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் குரூப்-டி போட்டியில் இந்தியாவின் ஜெய் மீனா, பாகிஸ்தானின் அரையன் ஹுசைனை எதிர்கொண்டார்.

இதில் ஜெய் மீனா 4-2, 4-0, 4-2, 4-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, 4-0 என்ற கணக்கில் நேர் செட்களில் அபார வெற்றியை பதிவு செய்தார்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆதியா திவாரி, தாய்லாந்தின் அலிஷா ஜீக்லரிடம் 4-1, 0-4, 0-4, 2-4, 4-6 என்ற கணக்கில் 1-4 எனத் தோல்வியடைந்தார்.

ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே காலிறுதிக்கு முன்னேற முடியும் என்பதால், ஆதியா தனது அடுத்த போட்டியில் பாகிஸ்தானின் கைனாத் ஷால்வானியை வீழ்த்த வேண்டும்.

மேலும், அந்த பாகிஸ்தான் வீராங்கனை தாய்லாந்தின் அலிஷாவை வீழ்த்தினால் மட்டுமே ஆதியா காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு நிலைக்கும்.

கபடி அணி

கபடி பிரிவில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, குரூப்-ஏ பிரிவில் தனது 2-வது ஆட்டத்தில் தென்கொரியாவை 63-31 என்ற கணக்கில் வீழ்த்தியது.

முதல் பாதியிலேயே இந்திய அணி 34-14 என்ற வலுவான முன்னிலை பெற்றதுடன், தென்கொரியாவை 2 முறை ஆல்-அவுட் செய்தது. 2-வது பாதியிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த இந்தியா, 32 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் குரூப்-ஏ பிரிவில் தொடர்ந்து 2-வது வெற்றியை பதிவு செய்தது.

கராத்தே

ஆண்களுக்கான 84 கிலோ குமித்தே பிரிவில் இந்தியாவின் சேத்தன் பட் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் சீனா தைபேயின் மெங்-யு சூவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தின் முடிவில் இருவரும் 1-1 என சமநிலையில் இருந்தனர். முதல் புள்ளியைப் பெற்றவர் வெற்றி பெறும் ‘சென்ஷு’ விதியின் அடிப்படையில் மெங்-யு சூ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

செபாக்டாக்ரா

செபக்டாக்ரா ஆண்கள் ரெகு குரூப்-பி பிரிவில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் மலேசியாவிடம் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. முன்னதாக ஜப்பானுக்கு எதிரான முதல் ஆட்டத்திலும் இந்தியா 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்திருந்தது.

இந்திய அணி தனது கடைசி குரூப் ஆட்டத்தில் நாளை பிலிப்பைன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com