

ஐச்சி-நகோயா,
ஆசிய பாரா விளையாட்டுப்போட்டி ஈட்டி எறிதலில் உலக சாதனையுடன் இந்திய வீரர் ஹானி தங்கம் வென்றுள்ளார்.
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவுக்கு ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எப்37/எப்38 பிரிவில் பங்கேற்ற ஹானி, தனது ஐந்தாவது முயற்சியில் 59.72 மீட்டர் தூரம் எறிந்து உலக சாதனை படைத்தநிலையில், கடைசி முயற்சியில் 60.49 மீட்டர் தூரம் எறிந்து தனது சாதனையை அவரே முறியடித்தார்.
இதன் மூலம் ஹானி, தங்கப் பதக்கத்தை தட்டி சென்றார். ஈரான் வீரர் ஹார்மோஸ் செய்டிகாஸ்பவுஞ்சி வெள்ளிப் பதக்கத்தையும், சீன வீரர் யூ செங்ஜி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆண்களுக்கான வட்டு எறிதல் எப்37 பிரிவில் ஹானி 57.04 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். தற்போது ஈட்டி எறிதலில் தங்கம் வென்றதுடன் உலகச் சாதனையும் படைத்துள்ளார்.