ஆசிய பாரா விளையாட்டு: 2-வது நாளில் அசத்தல்... 35 பதக்கங்களுடன் 6-வது இடத்தில் இந்தியா

இந்தியா பதக்கப் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
ஆசிய பாரா விளையாட்டு
Published on: 

ஐச்சி-நகோயா,

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 2-வது நாள் முடிவில் இந்தியா மொத்தம் 35 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இதில் 9 தங்கம், 11 வெள்ளி, 15 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். இதன் மூலம் பதக்கப்பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது.

வட்டு எறிதல்

ஆண்களுக்கான எப்43/எப்44/எப்62/எப்64 பிரிவு வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர்கள் மூன்று பதக்கங்களையும் வென்று அசத்தினர். தேவேந்தர் குமார் தங்கப் பதக்கத்தையும், ராகேஷ் வெள்ளிப் பதக்கத்தையும், பிரதீப் குமார் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

தடகளம்

பெண்களுக்கான 200 மீட்டர் டி12 ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சிம்ரன் சர்மா 24.80 விநாடிகளில் இலக்கைக் கடந்து போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார். இதே போட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனையான தேஜல்பென் டாமோர் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

பெண்களுக்கான 400 மீட்டர் டி20 பிரிவில் தீப்தி ஜீவன்ஜி 56.36 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார். அவர் புதிய போட்டிச் சாதனையையும் படைத்தார்.

உயரம் தாண்டுதல் போட்டியில் நிஷாத் குமார் தங்கம் வென்றார். ஆண்களுக்கான குண்டு எறிதல் எப்56/எப்57 பிரிவில் ஹோகடோ ஹோடோஷே வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார். பெண்களுக்கான 200 மீட்டர் டி35 ஓட்டப்பந்தயத்தில் பிரிவில் பிரீதி பால் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

துப்பாக்கி சுடுதல்

ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்எச்1 பிரிவில் இந்திய வீரர் மனிஷ் நார்வால் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். பெண்களுக்கான இதே பிரிவில் சிருஷ்டி அரோரா வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

பளுதூக்குதல், நீச்சல் போட்டி

ஆண்களுக்கான 65 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதலில் அசோக் 192 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார். நீச்சல் போட்டியிலும் இந்திய வீரர்கள் பதக்கங்களை வென்றனர்.

இதன் மூலம் இரண்டாவது நாள் முடிவில் இந்தியா 35 பதக்கங்களுடன் தொடர்ந்து பதக்க வேட்டையில் ஈடுபட்டு வருகிறது. வரும் நாட்களில் மேலும் பல பதக்கங்களை வெல்லும் முனைப்பில் இந்திய வீரர், வீராங்கனைகள் களமிறங்க உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com