

அயிச்சி நகோயா
ஆசிய பாரா விளையாட்டு போட்டியின் நீச்சல் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.
ஜப்பானில் அயிச்சி நகோயா நகரில் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் கடந்த 18-ந்தேதி தொடங்கின. தொடர்ந்து, 24-ந்தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன. மொத்தம், 45 நாடுகளை சேர்ந்த 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில், நீச்சல் வீரர் ஹிமன்ஷு நந்தல், ஆடவர் 400 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று தந்து பெருமை சேர்த்துள்ளார்.
அவர், 5 நிமிடங்கள் 10 வினாடிகளில் பந்தய தொலைவை அடைந்து வெண்கல பதக்கம் வென்றார். சீனாவை சேர்ந்த சுவான்ஜென் சன் தங்க பதக்கமும், ஜப்பானை சேர்ந்த உச்சு தொமிடா வெள்ளி பதக்கமும் வென்றனர். இதில், இந்திய வீரர் நந்தலுக்கு 32 வினாடிகளில் வெள்ளி பதக்கமும், 45 வினாடிகளில் தங்க பதக்கமும் கிடைக்காமல் போயுள்ளது.
இதனால் பதக்க பட்டியலில் 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 11 வெண்கல பதக்கங்களுடன் மொத்தம் 24 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.