

டோக்கியோ,
இந்தியாவின் நட்சத்திர பாரா தடகள வீராங்கனை தீப்தி ஜீவன்ஜி, 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான 400 மீட்டர் T20 ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார். இந்தப் போட்டியை 56.36 விநாடிகளில் கடந்து புதிய ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
தெலங்கானாவைச் சேர்ந்த 23 வயதான தீப்தி, இறுதிப்போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக ஓடி முதலிடத்தைப் பிடித்தார். ஜப்பானின் நினா கன்னோ 58.92 விநாடிகளில் ஓடி வெள்ளிப் பதக்கத்தையும், அதே நாட்டின் அகானே கட்டோ 1 நிமிடம் 0.26 விநாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். தீப்தி தனது போட்டியாளர்களை விட இரண்டு விநாடிகளுக்கும் அதிகமான முன்னிலையுடன் பந்தயத்தை நிறைவு செய்தார்.
ஏற்கெனவே 2023 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இதே பிரிவில் தங்கம் வென்ற தீப்தி, 2024 பாரா தடகள உலக சாம்பியன்ஷிப்பிலும் தங்கம் வென்று சாதித்தார். தொடர்ந்து 2024 பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினார். தற்போது மீண்டும் ஆசிய அளவில் தங்கம் வென்று தனது திறமையை நிரூபித்துள்ளார்.
தீப்தியின் இந்த வெற்றி இந்தியாவுக்கு 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஐந்தாவது தங்கப் பதக்கமாக அமைந்துள்ளது. அவரது விடாமுயற்சி, கடின உழைப்பு மற்றும் சாதனைப் பயணம் இந்திய விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.