

ஐச்சி-நகோயா,
பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் நிதேஷ் குமார் மற்றும் துளசிமதி முருகேசன் ஜோடி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். அந்த வகையில், பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.
பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் எஸ்.எல்.3 - எஸ்.யு.5 பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் நிதேஷ் குமார் மற்றும் துளசிமதி முருகேசன் ஜோடி, இந்தோனேசியாவின் லியானி ரத்ரி ஒக்டிலா - ஹிக்மத் ரம்தானி இணையை எதிர்கொண்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய ஜோடி 21-11 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. ஆனால், அடுத்தடுத்த ஆட்டங்களில் சிறப்பாக விளையாடிய இந்தோனேசிய ஜோடி 21-19, 21-14 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
இதனால் நிதேஷ் குமார் - துளசிமதி முருகேசன் ஜோடி வெள்ளிப் பதக்கத்துடன் போட்டியை நிறைவு செய்தது.
இதற்கு முன்பு ஆண்களுக்கான ஒற்றையர் எஸ்.எல்.3 பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் நிதேஷ் குமார், சகநாட்டு வீரர் பிரமோத் பகத்தை எதிர்கொண்டார். இதில் நிதேஷ் 21-18, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார். பிரமோத் பகட் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.