

கோலாலம்பூர்,
மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அஷ்மிதா சாலிஹா போராடி தோல்வியடைந்தார். இதன் மூலம் இந்த தொடரில் இந்தியாவின் பயணம் நிறைவுக்கு வந்தது.
உலக தரவரிசையில் 71-வது இடத்தில் உள்ள அஷ்மிதா, 23-வது இடத்தில் உள்ள டென்மார்க்கின் லினே கியர்ஸ்பெல்டை எதிர்கொண்டார். 61 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான ஆட்டத்தில் அஷ்மிதா 23-21, 18-21, 11-21 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தார்.
ஆட்டத்தின் முதல் சுற்றில் அபாரமாக விளையாடிய அஷ்மிதா 11-6 என்ற முன்னிலை பெற்றார். பின்னர் லினே 17-17 என சமநிலைக்கு வந்தாலும், பதற்றமின்றி விளையாடிய அஷ்மிதா 23-21 என்ற கணக்கில் முதல் சுற்றை கைப்பற்றினார்.
இரண்டாவது சுற்றிலும் அஷ்மிதா 10-5 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். ஆனால் இடைவேளைக்குப் பிறகு ஆட்டத்தின் வேகத்தை மாற்றிய லினே, இந்திய வீராங்கனையின் தவறுகளை திறமையாக பயன்படுத்தி 21-18 என்ற கணக்கில் வெற்றி பெற்று போட்டியை சமநிலைக்கு கொண்டு வந்தார்.
முடிவை நிர்ணயித்த மூன்றாவது சுற்றில் ஆரம்பத்தில் 4-4 என சமநிலை நிலவியது. அதன்பிறகு முழுமையாக ஆதிக்கம் செலுத்திய லினே, அஷ்மிதாவுக்கு எந்த வாய்ப்பும் அளிக்காமல் 21-11 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்தத் தொடரில் இந்தியாவின் மற்ற வீரர்களும் ஏமாற்றம் அளித்தனர். இந்திய வீராங்கனை மாளவிகா, இரண்டாவது சுற்றில் இதே லினே கியர்ஸ்பெல்டிடம் தோல்வியடைந்து வெளியேறினார். தேவிகா சிகாக், முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் சென் யுபெய்யிடம் நேர் செட்களில் தோற்றார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் எம்.ஆர். அர்ஜுன் - ஹரிஹரன் அம்சகருணன் ஜோடி, சீனாவின் ஹு கேயுவான் - லின் சியாங்கி ஜோடியிடம் தோல்வியடைந்தது. கலப்பு இரட்டையர் பிரிவில் சாத்விக் ரெட்டி கனபுரம் - ராதிகா சர்மா ஜோடியும் அமெரிக்க ஜோடியிடம் போராடி தோற்றது.
முன்னணி இந்திய வீரர்களான லக்சயா சென் மற்றும் எச். எஸ். பிரணாய் ஆகியோர் முதல் சுற்றிலேயே வெளியேறியிருந்த நிலையில், காலிறுதி வரை முன்னேறிய அஷ்மிதாவின் தோல்வியுடன் மலேசிய மாஸ்டர்ஸ் தொடரில் இந்தியாவின் சவால் முழுமையாக முடிவுக்கு வந்தது.