கேன்டிடேட் செஸ் போட்டி: 12-வது சுற்றில் குகேஷ் வெற்றி

கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
Image Courtesy: @FIDE_chess / Twitter
Image Courtesy: @FIDE_chess / Twitter
Published on

டொராண்டோ,

உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 5 பேர் பங்கேற்றுள்ளனர்.14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 12-வது சுற்று நேற்று நடந்தது.

சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் இந்த சுற்றில் அஜர்பைஜான் வீரர் நிஜாத் அப்சோவை எதிர் கொண்டார். கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் இந்த ஆட்டத்தில் 57-வது நகர்த்தலுக்கு பிறகு வெற்றி பெற்றார். அவர் பெற்ற 4-வது வெற்றியாகும். அப்சோவை 2-வது முறையாக வீழ்த்தியுள்ளார்.

மற்றொரு சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா 12-வது சுற்றில் ரஷியாவை சேர்ந்த இயன் நெபோம்னியாச்சியுடன் மோதினார் . கறுப்பு நிற காய்களுடன் விளையாடி பிரக்ஞானந்தா டிரா செய்தார். மற்றொரு இந்திய வீரர் விதித் குஜராத்தி அமெரிக்கா வீரர் பேபியானோவிடம் தோல்வியை தழுவினார்.

இன்னொரு ஆட்டத்தில் ஹிகாரு நகமுரா (அமெரிக்கா) பிரான்சை சேர்ந்த பிரவுசியாவை தோற்கடித்தார். 12 சுற்றுகள் முடிவில் குகேஷ், இயன் நெபோம்னியாச்சி, ஹிகாரு நகமுரா ஆகிய 3 வீரர்கள் தலா 7.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர்.

பேபியானோ 7 புள்ளியுடன் 4-வது இடத்தில் உள்ளார். பிரக்ஞானந்தா 6 புள்ளியுடன் 5-வது இடத்திலும், விதித் குஜராத்தி 5 புள்ளியுடன் 6-வது இடத்திலும் இருக்கிறார்கள். பிரவுசியா 4.5 புள்ளியுடன் 7-வது இடத்திலும், அப்சோவ் 3 புள்ளியுடன் கடைசி இடத்திலும் உள்ளனர். இன்னும் 2 சுற்றுகளே எஞ்சியுள்ளன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com