

சமர்கண்ட்,
சமர்கண்டில் நடைபெற்று வரும் 46-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் 5-வது சுற்றில் ஆண்கள் பிரிவில் இந்திய அணி நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில், மகளிர் அணி போலந்திடம் தோல்வியடைந்தது.
ஓபன் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, நெதர்லாந்தை எதிர்கொண்டது. இதில் இந்தியா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய ஆண்கள் அணி தொடர்ச்சியாக 5-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
மறுபுறம், மகளிர் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்திய அணி போலந்தை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1.5-2.5 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
இந்திய வீராங்கனை வைஷாலி, போலந்தின் அலெக்சாண்ட்ரா மால்ட்சேவ்ஸ்கயாவிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் மற்ற 3 ஆட்டங்களும் டிராவில் முடிந்தன.
இதன் மூலம் முதல் 4 சுற்றுகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருந்த இந்திய மகளிர் அணிக்கு, இந்தத் தொடரில் முதல் தோல்வி ஏற்பட்டுள்ளது.
ஆண்கள் அணி தொடர்ந்து வெற்றிகளை குவித்து முன்னேறி வரும் நிலையில், மகளிர் அணி அடுத்த சுற்றில் வெற்றிப் பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.