

ஷென்சென்,
சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார்.
சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் ஷென்செனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஹாங்காங்கின் லீ சியுக் இயூவை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இருப்பினும், லீ சியுக் இயூ, 21-16, 21-16 என்ற நேர் செட்களில் ஸ்ரீகாந்தை வீழ்த்தினார். இதன் மூலம் சீன மாஸ்டர்ஸ் தொடரில் இருந்து ஸ்ரீகாந்த் வெளியேறினார்.
முந்தைய சுற்றில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள விக்டர் லாயை நேர் செட்களில் வீழ்த்தி ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேறியிருந்தார்.
அதற்கு முன்பு நடைபெற்ற முதல் சுற்றில், சீன தைபேயின் உலகின் 21-வது நிலை வீரரான சி யூ-ஜென்னை 35 நிமிடங்களில் 21-16, 21-15 என்ற கணக்கில் வீழ்த்தி ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.