

தைபேய் சிட்டி,
சீன தைபே ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி தைபேய் சிட்டியில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 34-வது இடத்தில் இருக்கும் இந்திய இளம் வீராங்கனை தன்வி ஷர்மா, 24-ம் நிலை வீராங்கனையான ஹூயாங் யு ஹூனை (சீன தைபே) எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பஞ்சாப்பை சேர்ந்த 17 வயதான தன்வி ஷர்மா 21-17, 21-11 என்ற நேர்செட்டில் ஹூயாங்கை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 33 நிமிடமே தேவைப்பட்டது.
மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 28-வது இடம் வகிக்கும் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா 15-21, 18-21 என்ற நேர்செட்டில் 21-ம் நிலை வீராங்கனையான துய்லின் நுயெனிடம் (வியட்நாம்) பணிந்து நடையை கட்டினார். இன்று நடைபெறும் மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் தன்வி ஷர்மா - துய்லின் நுயென் மோதுகிறார்கள்.