காமன்வெல்த் போட்டிகள்: பாரா தடகள பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்றார் ஷர்மிளா தன்கர்

ஷர்மிளா தன்கர் 9.81 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து பாரா தடகள பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார்.
தங்கம் வென்ற ஷர்மிளா தன்கர்
Published on

கிளாஸ்கோ,

2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பாரா தடகள பிரிவில் பெண்களுக்கான 'ஷாட் புட்' F57 பிரிவில் இந்தியாவுக்கான முதல் தங்க பதக்கத்தை வென்று ஷர்மிளா தன்கர் வரலாறு படைத்தார்.

F57 பிரிவு குண்டு எறிதல் போட்டி

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 23-வது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகளின் 5-வது நாளான நேற்று இந்தியா 1 தங்கம் உள்பட 6 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற பாரா தடகளப் பிரிவில் (மாற்றுத்திறனாளிகள்) பெண்களுக்கான F57 பிரிவு குண்டு எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் 40 வயதான மாற்றுத்திறனாளி வீரர் ஷர்மிளா தன்கர் கலந்துகொண்டார்.

40 வயதான இவர் 9.81 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து இந்த சீசனிலேயே தனது சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தினார். இதன் மூலம் காமன்வெல்த் போட்டிகளில் பாரா தடகள பிரிவில் பதக்கம் வெல்ல இந்தியாவின் 20 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தங்கப் பதக்கத்தை வென்ற ஷர்மிளா தன்கர்

ஷர்மிளா தன்கர் 9.81 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து இந்த சீசனில் அவரது சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தி தங்கப் பதக்கத்தை வென்றார். இவருக்கு அடுத்ததாக இரண்டாமிடத்தில் 8.65 மீட்டர் தூரம் எறிந்த கானாவின் ஜினாபு இசா வெள்ளிப் பதக்கமும், நைஜீரியாவின் யூச்சாரியா இகியாசி 8.19 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

பாரா தடகளப் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம்

ஹரியானாவைச் சேர்ந்த ஷர்மிளா, சிறுவயதிலேயே இளம்பிள்ளை வாதத்தால் (போலியோ) பாதிக்கப்பட்டவர். குடும்ப வன்முறை, மோசமான சூழல் என பல சவால்களைக் கடந்து 34 வயதிற்குப் பின் விளையாட்டு வாழ்க்கைக்குள் வந்த இவர் இன்று சர்வதேச அளவில் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார். ஷர்மிளாவின் இந்த வெற்றியின் மூலம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பாரா தடகளப் பிரிவில் இந்தியா தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்று சாதனைப் படைத்துள்ளது. அதேபோல 2026 தொடரில் இந்தியாவுக்கு இது இரண்டாவது தங்கப் பதக்கமாகும்.

பாரா தடகளத்தில் இதே பிரிவில் இந்தியாவின் மற்றொரு வீரரான சில்பா ஷைலா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம் இந்தியா ஒரே போட்டியில் இரு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.

அதிகாரப்பூர்வ மறுஆய்வு

சர்ச்சைக்குரிய சூழலில் இந்தியா தரப்பில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, மற்றொரு இந்திய வீராங்கனையான ஷில்பா ஷைலாவுக்கு வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது. ஷைலா 7.26 மீட்டர் தூரம் எறிந்து தனது தனிப்பட்ட சிறந்த சாதனையை பதிவு செய்திருந்தார். தொடக்கத்தில் நைஜீரியாவின் யூச்சாரியா ஐயாசி வெண்கல பதக்கம் வென்றிருந்தார். ஆனால் இந்திய தரப்பு புகாரளித்து அதிகாரப்பூர்வ மறுஆய்வு செய்யப்பட்ட பிறகு, அவரது ஒரே செல்லுபடியாகும் முயற்சி ஃபவுல்' (விதிமீறல்) என அறிவிக்கப்பட்டது. இதனால் நான்காவது இடத்தில் இருந்த ஷைலாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. இருப்பினும் நைஜீரியா தரப்பில் இருந்தும் இதற்கு எதிராகப் புகார் அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஒரே போட்டியில் 2 பதக்கங்கள்

வெண்கல பதக்கம் கிடைத்த அந்த திருப்பமான தருணத்திற்கு பிறகு, கண்ணீர் மல்க ஷைலா, ஷர்மிளாவுடன் இணைந்து கொண்டாடினார். இதன் மூலம் இப்பிரிவில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்தன. F57 வகைப்பாடு என்பது கீழ் உடல் உறுப்பு குறைபாடுகள், உறுப்பு இழப்புகள் அல்லது தசை வலிமை குறைவு உள்ள விளையாட்டு வீரர்களுக்கான பிரிவாகும். 2 வயதில் இடது காலில் போலியோ பாதிப்புக்குள்ளான ஷர்மிளா, இந்த ஆண்டு நடைபெற்ற ஃபாஸ்ஸா' (Fazza) சர்வதேச பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வென்றார். அவர் 2022 பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகளிலும் பங்கேற்று 4-வது இடத்தை பிடித்திருந்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com