

கிளாஸ்கோ,
23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வரு கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 74 நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஆடவர் நீளம் தாண்டுதல் இறுதிப்போட்டியில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் 8.09 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தை வென்றார். இதன் மூலம், 2022 பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிக்குப் பிறகு தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
போட்டியின் முதல் மூன்று சுற்றுகள் வரை முன்னிலையில் இருந்த முரளி ஸ்ரீசங்கரை, ஜமைக்காவின் தஜாய் கேல் நான்காவது சுற்றில் 8.15 மீட்டர் தாண்டி முந்தி தங்கப்பதக்கத்தை வென்றார். ஸ்காட்லாந்தின் ஸ்டீபன் மெக்கென்சி 8.08 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
மற்றொரு இந்திய வீரரான லோகேஷ் சத்யநாதன் தனது சிறந்த முயற்சியில் ஐந்தாவது இடத்தைப் பிடித்து பதக்க வாய்ப்பைத் தவறவிட்டார்.