

ஒடென்சே,
டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை தன்வி சர்மா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
டென்மார்க்கின் ஒடென்சே நகரில் நடைபெற்று வரும் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில், இந்தியாவின் தன்வி சர்மா ஜெர்மனியின் யோன் லீயுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய தன்வி சர்மா, 21-17, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
காலிறுதிப் போட்டியில் தன்வி சர்மா, தென்கொரியாவின் ஆன் சே-யங்கை எதிர்கொள்கிறார். உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஆன் சே-யங்கை எதிர்கொள்வது தன்விக்கு கடுமையான சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் தன்வி சர்மா அரையிறுதிக்கு முன்னேறுவார். இதனால் இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.