

கேப் டவுன்,
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் சொலனி டெட்டே (வயது 38). இவர் 2 முறை குத்துச்சண்டையில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மேலும், இவர் எதிர் அணி வீரரை 11 விநாடிகளில் வீழ்த்தி கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். அவர் 2022ம் ஆண்டு வரை குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்ற நிலையில் பின்னர் போட்டிகளில் இருந்து விலகி இருந்தார்.
இந்நிலையில், சொலனி டெட்டே கடந்த வெள்ளிக்கிழமை இரவு கிழக்கு கேப் பகுதியில் மடன்சனியில் உள்ள தனது வீட்டிற்கு காரில் சென்றுள்ளார். காரில் அவரின் காதலியும் சென்றுள்ளார்.
வீட்டின் கதவு திறப்பதற்காக சொலனி டெட்டே காரில் காத்திருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த 2 பேர் காரில் இருந்த சொலனி டெட்டே மற்றும் அவரது காதலி மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கி சூட்டில் சொலனி டெட்டே சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அவரது காதலி படுகாயமடைந்தார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த துப்பாக்கி சூடு குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் , சொலனி டெட்டேவை கொலை செய்துவிட்டு தப்பியோடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.