பார்முலா1 கார் பந்தயம்: இங்கிலாந்து வீரர் முதலிடம்

வழக்கம் போல் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் இலக்கை நோக்கி காரில் அதிவேகத்தில் சீறிப் பாய்ந்தனர்.
பார்முலா1 கார் பந்தயம்: இங்கிலாந்து வீரர் முதலிடம்
Published on

மோக்யோராட்,

'பார்முலா1' கார் பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 14-வது சுற்றான ஹங்கேரி கிராண்ட்பிரி போட்டி அங்குள்ள மோக்யோராட் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 306.63 கிலோ மீட்டர் ஆகும். இதில் வழக்கம் போல் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் இலக்கை நோக்கி காரில் அதிவேகத்தில் சீறிப் பாய்ந்தனர்.

இங்கிலாந்தின் லான்டோ நோரிஸ் (மெக்லரன் அணி) 1 மணி 35 நிமிடம் 21.231 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்ததுடன் அதற்குரிய 25 புள்ளிகளை தனதாக்கினார். இந்த சீசனில் அவருக்கு கிடைத்த 4-வது வெற்றி இதுவாகும். அவரைவிட வெறும் 0.698 வினாடி மட்டும் பின்தங்கிய ஆஸ்திரேலியாவின் ஆஸ்கர் பியாஸ்ட்ரி (மெக்லரன் அணி) 2-வது இடத்தையும், இங்கிலாந்தின் ஜார்ஜ் ரஸ்செல் (மெர்சிடஸ் அணி) 3-வது இடத்தையும் பெற்றனர். நடப்பு சாம்பியனான நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட் புல் அணி) 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதுவரை நடந்துள்ள 14 சுற்று முடிவில் ஆஸ்கர் பியாஸ்ட்ரி 284 புள்ளிகளுடன் முதலிடத்திலும், லான்டோ நோரிஸ் 275 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், வெர்ஸ்டப்பென் 187 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். இதன் 15-வது சுற்று நெதர்லாந்தில் வருகிற 31-ந் தேதி நடக்கிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com