

பாரிஸ்,
பிரெஞ்சு ஓபன் 2026 பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
பிரெஞ்சு ஓபன் 2026 பேட்மிண்டன் தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள சிந்து, 17-வது இடத்தில் உள்ள சியு பின்-சியானை எதிர்கொண்டார்.
பாரிஸில் உள்ள அரினா கிராண்ட் பாரிஸ் அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து, முதல் செட்டை 21-13 என கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டிலும் சிந்துவின் ஆதிக்கம் தொடர்ந்தது. 21-14 என இரண்டாவது செட்டையும் வென்றார். இதன் மூலம் 21-13, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற சிந்து, அரையிறுதிக்கு முன்னேறினார்.
கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் சியு பின்-சியானை வீழ்த்தியிருந்த சிந்து, அவருக்கு எதிராக தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளார்.
மேலும், நடப்பாண்டில் பிடபிள்யூஎப் உலகச் சுற்றுப் போட்டிகளில் சிந்து அரையிறுதிக்கு முன்னேறுவது இது நான்காவது முறையாகும். முன்னதாக ஜனவரியில் மலேசிய ஓபனிலும், ஜூன் மாதம் ஆஸ்திரேலிய ஓபனிலும் அரையிறுதிக்கு முன்னேறிய அவர், ஜூலை மாதம் ஜப்பான் ஓபன் பட்டத்தையும் வென்றிருந்தார்.