கிராண்ட் சுவிஸ் செஸ்: சாம்பியன் பட்டம் வெல்வாரா தமிழக வீராங்கனை வைஷாலி..?

மகளிர் பிரிவில் வைஷாலி மற்றும் கேத்ரினோ லாக்னோ தலா 7½ புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர்.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

மர்கண்ட்,

பிடே கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டி உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 10-வது சுற்று ஆட்டம் நேற்று நடந்தது.

இதில் ஓபன் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் ஹன்ஸ் மோக் நிமனை எதிர்கொண்டார். கருப்புநிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 38-வது நகர்த்தலில் தோல்வியை தழுவினார்.

மற்றொரு ஆட்டத்தில் உலக சாம்பியனான தமிழக வீரர் குகேஷ் 42-வது நகர்த்தலில் கேப்ரியல் சர்கிஸ்சியனை (அர்மெனியா) தோற்கடித்தார். அர்ஜூன் எரிகைசி (இந்தியா)- யூ யாங்யி (சீனா) இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.

இதன் மகளிர் பிரிவில் வெள்ளைநிற காய்களுடன் ஆடிய தமிழக வீராங்கனை ஆர்.வைஷாலி 42-வது நகர்த்தலில் மரியா முசிச்சுக்கை (உக்ரைன்) வீழ்த்தி 6-வது வெற்றி சுவைத்தார். இதே போல் இந்தியாவின் வந்திகா அகர்வால், மைலி ஜேட் ஓவெலெட்டை (கனடா) வென்றார். இன்னும் ஒரு சுற்று எஞ்சி இருக்கும் நிலையில் மகளிர் பிரிவில் வைஷாலி, கேத்ரினோ லாக்னோ (ரஷியா) தலா 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர்.

யார் சாம்பியன் என்பதை உறுதி செய்யும் கடைசி சுற்று ஆட்டம் இன்று நடக்கிறது. வைஷாலி இறுதி சுற்றில் சீனாவின் டான் ஜோங்ஜியுடன் மோதுகிறார். இதில் வெற்றி பெற்று வைஷாலி சாம்பியன் பட்டம் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com