

18 வயதான இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை அனாஹத் சிங், கனடாவின் ஒன்டாரியோவில் நடைபெற்ற உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் எகிப்தின் ருகய்யா சேலமை 11-3, 11-7, 11-9 என்ற நேர் செட்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இதன் மூலம் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை அனாஹத் சிங் படைத்துள்ளார்.
இந்த வரலாற்று வெற்றிக்கு பிறகு, ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவதே தனது அடுத்த இலக்கு என்று அனாஹத் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அனாஹத் சிங், "ஒலிம்பிக்கில் ஸ்குவாஷ் விளையாட்டு சேர்க்கப்பட்டிருப்பது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஒலிம்பிக்கில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று எந்த ஸ்குவாஷ் வீரரும் இதற்கு முன் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மூலமாகவே ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவதை இலக்காக கொண்டுள்ளேன். அந்த வாய்ப்பு கிடைத்துவிட்டால், அடுத்த இரண்டு ஆண்டுகளை தகுதி சுற்றுகளுக்காக செலவிடாமல், ஒலிம்பிக் போட்டிக்கான தயாரிப்பில் முழு கவனத்தையும் செலுத்த முடியும்" என்று தெரிவித்தார்.