ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை ரஷிதா கால்இறுதிக்கு தகுதி

ரக்ஷிதா ராம்ராஜ், ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சென் யு பெய்யை வென்று கால்இறுதிக்கு முன்னேறினார்.
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்:  இந்திய வீராங்கனை ரஷிதா கால்இறுதிக்கு தகுதி
Published on: 

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை ரக்ஷிதா, ஒலிம்பிக் சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

சர்வதேச பேட்மிண்டன் போட்டி

ஹாங்காங் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கவ்லூன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை ரக்ஷிதா ராம்ராஜ் 21-18, 24-22 என்ற நேர்செட்டில் டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனும், உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருப்பவருமான சென் யு பெய்க்கு (சீனா) அதிர்ச்சி அளித்து கால்இறுதிக்கு முன்னேறினார். கோவையை சேர்ந்த 19 வயதான ரஷிதா, ஐதராபாத்தில் உள்ள கோபிசந்த் பேட்மிண்டன் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். கால்இறுதியில் ரக்ஷிதா, தாய்லாந்தின் போர்ன்பவீ சோச்சுவோங்கை சந்திக்கிறார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அஷ்மிதா சாலிஹா 17-21, 12-21 என்ற நேர்செட் டில் ஜப்பானின் ஹினா அகெசியிடம் பணிந்தார்.

ரஷிதா மகிழ்ச்சி

வெற்றிக்கு பிறகு ரஷிதா கூறுகையில், “எனது விளையாட்டு வாழ்க்கையில் நான் பெற்ற மிகப்பெரிய வெற்றிகளில் இதுவும் ஒன்றாகும். சென் யு பெய் எனது முன்மாதிரி. அவருக்கு எதிராக நான் பெற்ற வெற்றியை இன்னும் நம்ப முடியவில்லை. எனது பேட்மிண்டன் வாழ்க்கையில் மிகவும் மறக்க முடியாத நாட்களில் ஒன்றாக இது இருக்கும் என்று நினைக்கிறேன். அவருக்கு எதிரான மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது தாக்குதல் ஆட்டம் சிறப்பாக இருந்தது வெற்றிக்கு வழிவகுத்தது. நான் யாருக்கும் குறைந்த வள் இல்லை. எதிர்காலத்தில் இதைவிட சிறப்பாக என்னால் செயல்பட முடியும் என்று நம்புகிறேன். வரவிருக்கும் போட்டிகளிலும் தொடர்ந்து எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன்” என்றார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்ஷயா சென் 21-11, 21-18 என்ற நேர்செட்டில் ராஸ்முஸ் ஜெம்கியை (டென்மார்க்) தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார்.

சாத்விக்-சிராக் ஜோடி அசத்தல்

ஆண்கள் இரட்டையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி 21-19, 21-16 என்ற நேர்செட்டில் மலேசியாவின் நூர் முகமது அஸ்ரின் அயூப்- தான் வீ கியோங் இணையை விரட்டியடித்து கால்இறுதியை எட்டியது.

பெண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கூட்டணி 20-22, 13-22 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் லாரென் லாம்-அலிசன் லீ ஜோடியிடம் வீழ்ந்து வெளியேறியது.

X