ஆசிய பாரா விளையாட்டு - 65 பதக்கங்கள்... தடகளத்தில் புதிய வரலாறு படைத்த இந்தியா

முந்தைய பதக்க எண்ணிக்கையை முறியடித்துள்ளது.
ஆசிய பாரா விளையாட்டு - 65 பதக்கங்கள்... தடகளத்தில் புதிய வரலாறு படைத்த இந்தியா
Published on: 

நகோயா,

ஜப்பானில் நடைபெற்ற 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா பாரா தடகள பிரிவில் 65 பதக்கங்களைக் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. இதில் 22 தங்கம், 19 வெள்ளி, 24 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.

முந்தைய சாதனை

கடந்த 2023-ம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா பாரா தடகளத்தில் 53 பதக்கங்களை வென்றிருந்தது. தற்போது அந்த எண்ணிக்கையைவிட 12 பதக்கங்கள் கூடுதலாக வென்று இந்திய வீரர், வீராங்கனைகள் சாதனை படைத்துள்ளனர்.

இந்தியாவின் ஒட்டுமொத்தப் பதக்க வேட்டையில் பாரா தடகளம் முக்கியப் பங்கு வகித்துள்ளது. தடகளப் பிரிவில் மட்டும் 65 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

4 தங்கப் பதக்கங்கள்

போட்டியின் இறுதி நாளில் இந்தியா தடகளத்தில் 13 பதக்கங்களை வென்றது. இதில் 4 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எப்64 பிரிவில் சுமித் அனில் 72.46 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றார். இரண்டு முறை பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ள அவர், ஆசிய பாரா விளையாட்டிலும் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்தார்.

ஈட்டி எறிதல் எப்51 பிரிவில் பிரணவ் சூர்மா 32.87 மீட்டர் தூரம் எறிந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கம் வென்றார். எப்37/38 பிரிவில் ஹானி 60.49 மீட்டர் தூரம் எறிந்து உலகச் சாதனையுடன் மற்றொரு தங்கத்தை இந்தியாவுக்கு பெற்றுத் தந்தார்.

ஆண்களுக்கான 400 மீட்டர் டி64 பிரிவில் சந்தீப் 52.28 விநாடிகளில் இலக்கைக் கடந்து உலகச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

வெள்ளி, வெண்கலம்

ஆண்களுக்கான 1,500 மீட்டர் டி46 பிரிவில் பிரமோத் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் மகேந்திர குர்ஜார் வெள்ளிப் பதக்கத்தையும், மகளிர் நீளம் தாண்டுதல் டி47 பிரிவில் நிமிஷா சக்கங்கல்பரம்பில் வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

ஆண்களுக்கான 400 மீட்டர் டி64 பிரிவில் அஜய் குமார் வெண்கலப் பதக்கத்தை வென்றார். ஈட்டி எறிதல் உள்ளிட்ட பிற போட்டிகளிலும் இந்திய வீரர்கள் பதக்கங்களைப் பெற்று எண்ணிக்கையை உயர்த்தினர்.

இதன் மூலம் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் தடகள அணி 65 பதக்கங்களுடன் தனது பயணத்தை நிறைவு செய்து, முந்தைய பதக்க எண்ணிக்கையை முறியடித்துள்ளது.

மொத்தமாக இந்தியா 30 தங்கம் உள்பட 114 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com