

டோக்கியோ,
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வரும் நிலையில், ஆக்கியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
2026 ஆசிய விளையாட்டு ஆக்கி இறுதிப்போட்டியில் இந்தியா - மலேசியா அணிகள் மோதின. இப்போட்டியில், ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்து இந்தியாவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 14-வது நிமிடத்தில் மலேசியாவின் செல்லோ கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார்.
அதன்பின்னர் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடினர். ஜக்ராஜ் சிங் கோல் அடித்து இந்தியாவை 2-1 என முன்னிலைக்கு அழைத்துச் சென்றார்.
தொடர்ந்து 43-வது நிமிடத்தில் ஹர்திக் சிங் கோல் அடிக்க, இந்திய அணி 3-1 என முன்னிலை பெற்றது.
பின்னர் இந்திய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி, மேலும் இரண்டு கோல்களை அடித்தது. இதன் மூலம் ஆட்டநேர முடிவில் 5-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி இந்தியா தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.
இந்த தங்கப் பதக்கத்தின் மூலம் இந்தியாவின் மொத்த தங்கப் பதக்க எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா இதுவரை 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களை வென்று, ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.