

நகோயா,
ஆசிய விளையாட்டில் இந்திய அணிக்கு அதிரடி தொடக்கம் கிடைத்துள்ளது.
ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நேற்று கோலாகலமாக தொடங்கின. 45 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டிகள் அக்டோபர் 4-ந் தேதி வரை நடைபெறுகின்றன.
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் அக்கி அணி இன்று தனது முதல் ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கியது முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, உஸ்பெகிஸ்தானுக்கு எந்த வாய்ப்பும் கொடுக்காமல் கோல்களை குவித்தது.
முடிவில் இந்திய அணி 19-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணியின் தீபிகா சிறப்பாக விளையாடி அசத்தினார். அவர் 5 பெனால்டி கார்னர் கோல்கள் உட்பட மொத்தம் 8 கோல்களை அடித்தார்.
மகளிர் டேபிள் டென்னிஸ் பிரிவில், குரூப் எப் பிரிவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி இந்தோனேசியாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஸ்ரீஜா அகுலா, தியா சித்தாலே மற்றும் யஷஸ்வினி கோர்படே ஆகியோர் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.
ஆண்கள் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய அணி தனது முதல் குரூப் ஆட்டத்தில் இந்தோனேசியாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்திலும் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
சத்யன் ஞானசேகரன், மானவ் தக்கர் மற்றும் மானுஷ் ஷா ஆகியோர் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்று இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை பெற்றுத் தந்துள்ளனர்.