

புவனேஸ்வர்,
ஆசிய ரக்பி எமிரேட்ஸ் 20 வயதுக்குட்பட்டோருக்கான 7 பேர் ரக்பி தொடரில் இந்திய பெண்கள் அணி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வெண்கலப் பதக்கம் வென்றது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் இந்தத் தொடர் நடைபெற்றது. இதில் இந்திய மகளிர் அணி அரையிறுதியில் மலேசியாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி 12-14 என்ற புள்ளிக்கணக்கில் நூலிழையில் தோல்வியடைந்தது.
இதையடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இலங்கையை சந்தித்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 27-0 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
இந்திய அணியில் சம்ருத்தி கடம் 2 முறை பந்தை இலக்கு கோட்டுக்குக் கொண்டு சென்று புள்ளிகளைப் பெற்றார். அதிதி லோந்தே, அக்சயா என்.எஸ்., அனிதா முர்மு ஆகியோர் தலா ஒரு முறை புள்ளிகளைப் பெற்றனர். தீபாலி ததே ஒரு கூடுதல் புள்ளியையும் பெற்றுத் தந்தார்.
இதன் மூலம் கடந்த ஆண்டு பீகாரின் ராஜ்கிரில் நடைபெற்ற தொடரிலும் வெண்கலம் வென்ற இந்திய மகளிர் அணி, இந்த ஆண்டும் அதே சாதனையைத் தொடர்ந்தது.
இந்திய ஆண்கள் அணி தனது கடைசி குழு ஆட்டத்தில் சீன தைபே அணியிடம் 5-12 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. பின்னர் சிங்கப்பூருக்கு எதிரான ஆட்டத்திலும் 5-29 என்ற கணக்கில் தோற்றது.
7-வது மற்றும் 8-வது இடத்துக்கான ஆட்டத்தில் தாய்லாந்தை 24-7 என்ற கணக்கில் வீழ்த்திய இந்திய அணி, ஒட்டுமொத்தமாக 7-வது இடத்தைப் பிடித்தது.
இந்தத் தொடரின் ஆண்கள், பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் ஹாங்காங் சீனா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இரு பிரிவுகளிலும் மலேசியா 2-வது இடத்தைப் பிடித்தது. ஆண்கள் பிரிவில் சீன தைபே வெண்கலப் பதக்கம் வென்றது. பெண்கள் பிரிவில் அந்தப் பெருமையை இந்திய அணி பெற்றது